தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்று பேரவை தலைவராக அவையை திருப்பூர் தெற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா வழிநடத்தினார்.

சட்டப்பேரவையை பெண் ஒருவர் வழிநடத்துவதற்கு திமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைியல் மானிய கோிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. வினா - விடைகள் நேரமும் நடைபெற்று வருவதால் சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்றைய சட்டப்பேரவை விவாத்தின் போது சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் மற்றும் துணை சபாநாயகர் ரவி சங்கர் ஆகியோர் சட்டப்பேரவையில் இல்லாத நேரத்தில் மாற்று பேரவை தலைவராக திருப்பூர் தெற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா அவையை வழிநடத்தினார்.

அப்போது பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, லேடி வெல்லிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசானத்தில் ஒரு பெண் பேரவை தலைவராக அமர வேண்டுமென்பது நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இன்று மாற்று பேரவை தலைவராக நீங்கள் அமர்ந்து இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உங்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

இதனிடையே ஆவடி மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட 8 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் முழு விவரம் இதோ.

1. பாதுகாப்பான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டங்கள்


மக்களுக்குத் தேவையான குடிநீரைத் தடையின்றி வழங்கும் வகையில் பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் 1800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாயும், பழமையான 33 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும். மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

2. நவீன பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை


மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாளச் சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும், சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த 236 கோடி ரூபாய் செலவிடப்படும்.

3. அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி

திருநெல்வேலி மாநகராட்சியில் 256 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், சேலம் மாநகராட்சியில் 291 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் 'திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள்' (Waste to Energy Projects) செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் மொத்தம் 547 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

4. மேம்படுத்தப்பட்ட நகர்ப்புர சாலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பு

பணிகளுக்காகத் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைப் தோண்டப்பட்டு சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் 1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

5. நகர்ப்புர பசுமையாக்கல் மற்றும் பொழுதுபோக்குப் பூங்காக்கள்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நகரங்களில் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு பசுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் 130 கோடி ரூபாய் செலவிலும், மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் 175 கோடி ரூபாய் செலவிலும் என மொத்தம் 305 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

6. பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு

நகர்ப்புர உள்ளாட்சிகளின் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்கும் வகையில், புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் 335 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

7. பாரம்பரிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் சீரமைப்பு

சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தில்லை நடராஜர் திருத்தேர் விழாவைச் சிறப்பாக நடத்தவும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி தரிசனம் செய்யவும், கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளைத் தரைக்கு அடியில் கொண்டு சென்று வீதிகளை நவீன முறையில் சீரமைக்க 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை (Heritage Walk) அமைக்கப்படும். கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த 50 கோடி ரூபாய் செலவிடப்படும்.

8. சமச்சீர் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு

சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று தெரிவித்தார்.