கோவை: கோவை மாநகராட்சியில் காங்கிரஸ் - திமுக கவுன்சிலர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதையடுத்து கவுன்சிலர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டார்.


கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று (ஜூலை 17) தொடங்கியது. மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், மண்டல அலுவலகங்களில் மனைவரன் முறைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் மண்டல தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை என, மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மாமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். அவருக்கு மேயரும், திமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தி.மு.க.,- காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பெண் கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக மோதிக் கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து காங்., கவுன்சிலர் காயத்ரி, கம்யூ., கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, பிரபா, சாந்தி ஆகிய 5 பேரை 2 மாதம் சஸ்பெண்ட் செய்வதாக மேயர் அறிவித்தார்.

இதற்கிடையில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு இன்று அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், பிரபாகரன், சர்மிளா ஆகியோர் காலி குடங்களுடன் வந்தனர். அப்போது அவர்கள் மாநகராட்சியில் பல பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது என குற்றம் சாட்டினர்.