சென்னை: தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அவர் கொளத்துார் தொகுதியில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில், கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், 8,795 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.இதையடுத்து, சில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்ததாக, ஸ்டாலின் தரப்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, கொளத்துார் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுப்பதிவு இயந்திரங்கள், கருவிகள் செயல்பாடுகள் சரிபார்க்கும் பணி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் நடந்தது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 24) தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கொளத்தூர் தொகுதியில் 6 ஓட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் ஒப்பிட்டதில் முறைகேடுகள் தெரியவந்துள்ளன. பல ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விபி பேடுகளை சரி பார்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.