கொடைக்கானல்: கொடைக்கானலில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டு மக்களின் நீராதாரமாக மனோரத்தினம் சோலை அணை மற்றும் கீழ் குண்டாறு அணை விளங்குகிறது. நடப்பாண்டில் ‘எல்-நினோ’ தாக்கம் காரணமாக தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யாததால் கொடைக்கானல் நகர மக்களின் குடீநீர் ஆதாராமாக இருக்கும் 2 அணைகளும் வறண்டு விட்டன. அணைகளில் நீர் இருப்பு இல்லாத நிலையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஜிம்கானா மைதானத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பல ஹோட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. குடிநீர் பிரச்சினையால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நகராட்சி அறிவுறுத்தி உள்ளது. அதேசமயம் தேவைக்கேற்ப சரிவர குடிநீர் கிடைக்காததால் வேறு வழியின்றி 20 லிட்டர் தண்ணீர் கேன் ரூ.50 வரை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. கொடைக் கானல் நகர் மட்டுமின்றி மலைக்கிராமங்களிலும் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.