சென்னை: வழக்குகளின் தேக்கத்தை வெகுவாக குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில், தமிழக சட்டத்துறை அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேசுகையில், “பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற பல வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் உருவாக்கிய 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில், என்னை அழைத்து பெருமைப்படுத்தியமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் மற்றும் நீதித் துறையில் இன்னும் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகின்றன. அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. வழக்குகளின் தேக்கத்தை வெகுவாக குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரி்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 200 வழக்குகளுக்கு ஒரு நீதிமன்றம் என்ற வகையில் அதற்கான பணிகளை துரிதப்படுத்த முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்”, என்றார்.