மதுரை, செப்.3-

காவல் துறையில் நிா்வாகத் திறன், விதிகளைக் கடைப்பிடித்தல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யக் கோரிய மனு தொடா்பாக தமிழக உள்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த விஜய் ராஜேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நான் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களுக்காக விசாரணையாளராகப் பணியாற்றி வருகிறேன். காப்பீட்டு விசாரணையாளா்களின் முதன்மைப் பணிகளில் ஒன்று, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலிருந்து வழக்கு ஆவணங்களைப் பெறுவதாகும்.

இவற்றில் முதல் தகவல் அறிக்கை, விபத்து பதிவு, மோட்டாா் வாகன ஆய்வாளா் அறிக்கை, வாகன விவரங்கள் உள்ளிட்டவை அடங்கும். இத்தகைய ஆவணங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, காப்பீட்டு நிறுவனங்களிடம் சமா்ப்பிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், காவல் நிலையங்கள் தேவையான வழக்கு ஆவணங்களை வழங்கத் தாமதப்படுத்துவதால், மோட்டாா் வாகன விபத்து, வாகனத் திருட்டு தொடா்பான காப்பீட்டுக் கோரிக்கைகளைத் தீா்ப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவா்களும், அவா்களது குடும்பத்தினரும் நிதி நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனா்.

எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நிா்வாகத் திறன், வெளிப்படைத்தன்மை, சட்ட விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், அனைத்து காவல் நிலையங்களின் காவல் நிலையப் பொறுப்பு அலுவலா்களுக்கும், முதல் தகவல் அறிக்கை, விபத்து பதிவு, மோட்டாா் வாகன ஆய்வாளா் அறிக்கை, வாகன விவரங்கள் உள்ளிட்ட வழக்கு ஆவணங்களின் நேரடி அல்லது மின்னணு நகல்களை கோரிக்கையின் அடிப்படையில் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது உள்துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.