உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சமையல் கியாஸ் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..இதனையடுத்து பிரதமர் மோடி, பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், பணியாளர்கள் கூடுமானவரை வீட்டில் இருந்து வேலை செய்வதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகள் ஆன்லைனில் செயல்பட முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சிக்கன நடவடிக்கையாக, பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க சிறப்பு பாதுகாப்பு படைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் வாகன அணிவகுப்பை குறைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். வாகனங்கள் குறைக்கப்பட்டாலும், கட்டாயப் பாதுகாப்பு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
பிரதமரின் பாதுகாப்புக்கான புளூ புக் விதிமுறைகளில் மாற்றமின்றி தேவையற்ற வாகனங்களை நீக்க அறிவுறுத்தி உள்ளார். மேலும் பாதுகாப்பு வாகனங்களில் மின்சார கார்களை கூடுதலாகப் பயன்படுத்தவும் யோசனை வழங்கியுள்ளார். இந்த மாற்றத்திற்காகப் புதிய வாகனங்களை வாங்கக் கூடாது என்றும், இருப்பில் உள்ள வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.