'இந்தியா பெட்ரோலிய இறக்குமதி செய்வதால் பயனடைபவர்கள் ஒன்று சேர்ந்து, எத்தனால் கலப்பு திட்டத்துக்கு எதிராக அவதுாறு பிரசாரம் செய்கின்றனர் என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டினார்.


இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 22 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலிய எரிபொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்தப் பணம் நாட்டிலிருந்து வெளியே செல்கிறது, அதே நேரத்தில் பெட்ரோலிய எரிபொருட்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. இந்த இறக்குமதிகளையும் மாசுபாட்டையும் குறைத்து, எரிசக்தித் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்வதே எனது நோக்கம்.நான் எத்தனாலை மட்டுமல்ல, மாற்று எரிபொருள்கள் மற்றும் உயிரி எரிபொருள்கள் குறித்தும் எப்போதும் பேசி வருகிறேன். இவற்றில் எத்தனால், மெத்தனால், பயோ-சிஎன்ஜி, மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை அடங்கும். எத்தனால் கலப்பு என்பது புதிய விஷயம் அல்ல. பிரேசில், அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்லாண்டுகளாக எத்தனாலைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் ஓடும் வாகனங்கள் உலகளாவிய வாகன நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அவை சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றுகின்றன. எத்தனால் கலப்பு என்பது பாதுகாப்பற்றதாக இருந்திருந்தால், இந்த நிறுவனங்கள் எத்தனாலுக்கு ஏற்ற வாகனங்களை ஆதரிக்கவோ அல்லது உருவாக்கவோ மாட்டார்கள்.


ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதிச் சூழலமைப்பிலிருந்து ஆதாயம் பெறும் ஒரு தரப்பினர் உள்ளனர். அவர்களே இந்த தவறான பிரசாரத்துக்கு காரணம். எத்தனால் வாகனங்களைப் பாதிக்கும் என்று சில தனிநபர்களும் குழுக்களும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் பொய்யான கூற்றுகளும், தவறான புரிதலை ஏற்படுத்தும் உதாரணங்களும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. எரிபொருள் இறக்குமதியில் ஈடுபட்டுள்ள சில தனியார் நிறுவனங்கள், எத்தனால் குறித்த எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கவும், என் மீது அவப்பெயரை ஏற்படுத்தவும் இப்பிரசாரத்திற்கு நிதியுதவி அளித்து வருகின்றன. ஆனால் மக்கள் உண்மையை உணர்ந்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இறக்குமதியைக் குறைக்கவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவும் ஒரு கொள்கை என்றால், அது கண்டிப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.