பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியாவின் பாதுகாப்பு கூட்டணியில் இணைய வங்கதேசம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கிஆகிய நாடுகள் இந்த மாத தொடக்கத்தில் மெக்காவில் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, 3 நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான ஆயுதத் தாக்குதலை, அவை 3 நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதுவோம் என அவை முறைப்படி உறுதியளித்துள்ளன. இதனை ஆய்வாளர்கள் இஸ்லாமிய நேட்டோ என கருதுகின்றனர். இந்த சூழலில், இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான வங்கதேசமும் இந்த கூட்டமைப்பில் இணைய ஆர்வம் காட்டியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள வங்கதேச வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர், "வங்காளதேசம் தனது சொந்த நலன்களையும், உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் மாறிவரும் இயக்கவிலை கருத்தில் கொண்டு, சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பொருளாதார அல்லது பாதுகாப்பு கட்டமைப்பில் இணைவதற்கான சாத்தியக்கூறு குறித்து நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்த பின்னர் அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா தஞ்சம் கொடுத்ததையும் விமர்சித்துள்ளார்.