புதுடெல்லி: “இளைஞர்களின் நலனும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலமும் மோடி அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகவும் உறுதியாகவும் உள்ளது.” என்று அமித் ஷா கூறியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பான பிரதமரின் அறிவிப்பை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இளைஞர்களின் நலனும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலமும் மோடி அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகவும் உறுதியாகவும் உள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைப்பதன் மூலம் விசாரணையை விரைவுபடுத்தவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமர் எடுத்துள்ள முடிவு, இந்த உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும். வினாத்தாள் கசிவு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களுக்கு எதிராகப் பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த முக்கிய நடவடிக்கை ஒரு மைல்கல்லாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.