கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தினார்.
கொழும்பு நகரில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சரண்ஷ் ஜெயின் இடம் பெற்றார். அதே வேளையில் குல்தீப் யாதவ் வைரஸ் தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் இடம் பெறவில்லை. இலங்கை அணியில் கமில் மிஷாரா அறிமுக வீரராக இடம் பெற்றார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி சிறந்த தொடக்கத்தை அளித்தது. அந்த இணை 37 ரன்கள் எடுத்த போது, கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 53 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் அசிதா பெர்னாண்டோ பந்தில் போல்டானார்.
இதையடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் 9-வது அரை சதத்தை கடந்தார். சிறப்பாக பேட் செய்து வந்த அவர் 108 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் அசிதா பெர்னாண்டோ பந்தில் நிரோஷன் டிக்வெல்லாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட் செய்து வந்த தேவ்தத் படிக்கல் 193 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்த நிலையில் கேஷரா நுவந்தா பந்தில் போல்டானார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. துருவ் ஜூரெல் 21 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களும், சரண்ஷ் ஜெயின் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்களை வீழ்த்தினார். கேஷரா நுவந்தா, லகிரு குமாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க இந்திய அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.