அமராவதி: ஆந்திராவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றால் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்​ளது.


கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. கடந்த 2020 முதல் 2021 தொடக்கம் வரை இந்தியா​வில் முதல் கரோனா அலை ஏற்பட்​டது. கடந்த 2021ம் ஆண்டில் இரண்டாம் கரோனா அலையும், கடந்த 2022ம் ஆண்டு தொடக்கத்தில் மூன்றாம் கரோனா அலையும் ஏற்பட்டன. மூன்று கரோனா அலைகளின்​போது இந்தியாவில் 4.50 கோடி பேர் வைரஸ் தொற்​றால் பாதிக்கப்பட்டனர். இதில் 5.33 லட்​சம் பேர் உயிரிழந்தனர். கடந்த 2022 ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு உலகம் முழு​வதும் கரோனா வைரஸ் பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்​பியது.

இந்த சூழலில் கடந்த சில வாரங்​களாக ஆந்திராவின் ஒய்​எஸ்​ஆர் கடப்பா மாவட்​டத்​தில் திடீரென கரோனா வைரஸ் பரவி வருகிறது. கடப்பா மாவட்​டத்​தின் ராஜம்​பேட்டை பகு​தியை சேர்ந்த 52 வயது நபருக்கு சில நாட்​களுக்கு முன்பு கடுமை​யான காய்ச்சல் ஏற்பட்​டிருக்கிறது. மேல்​ சிகிச்சைக்காக அவர் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்​டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்​தார். கரோனாவின் ஒமைக்​ரான் வைரஸ் பாதிப்பால் அவர் உயிரிழந்திருப்​பதாகக் கூறப்​படு​கிறது. கடப்​பாவை சேர்ந்த 43 வயது நபர் அண்மையில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையின் கரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்​தார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.


இந்தச் சூழலில் கடப்பா மருத்​து​வக் கல்​லூரியை சேர்ந்த 25 வயது மருத்​துவ மாணவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்​ளது. அவர் தனிமைப்​படுத்​தப்பட்டுள்ளார். அவரையும் சேர்த்து கடப்பா பகுதியில் இது​வரை 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனை​வரும் தனிமைப்படுத்தப்​பட்டு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது. அவர்​களோடு தொடர்​பில் இருந்த 40 பேரின் சளி மாதிரி​கள் பெறப்​பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளன. இதில் 18 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்​பது உறுதி செய்யப்​பட்டு உள்​ளது. மீத​முள்​ளோரின் ஆய்வக பரிசோதனை அறிக்கை விரை​வில் கிடைக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஆந்​தி​ரா​வில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அதிதீ​விர நடவடிக்​கைகளை எடுக்க மாநில அரசு உத்​தர​விட்டுள்​ளது. இதுதொடர்​பாக கடப்பா மாவட்ட பொறுப்பு அமைச்​சர் சவி​தா, மாவட்ட ஆட்​சியர் ஸ்ரீதர், மாவட்ட சுகா​தா​ரத் துறை அதி​காரி ரவி பாபு ஆகியோரிடம் முக்​கிய ஆலோ​சனை நடத்தி உள்​ளார். கடப்பா மட்​டுமன்றி ஆந்​திரா முழு​வதும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளன. குறிப்​பாக அரசு மருத்​து​வ​மனை​களில் தனி வார்​டு​கள், ஆக்​ஸிஜன் சிலிண்​டர்​கள், வென்​டிலேடர்​கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.