தேசிய அளவிலான அரசு போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத் திருத்த மசோதா அமளிக்கு இடையே லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வினாத்தாள் கசிவை தடுக்க, ஏற்கனவே உள்ள, 'பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் - 2024'ல் திருத்தம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசின் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், 2024ல் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தில், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.
வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்வு காண, மாநிலங்கள் முழுதும் பிரத்யேக விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்பட உள்ளன. லோக்சபாவில் இன்று (ஜூலை 27) இந்த சட்ட திருத்த மசோதாவை பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தாக்கல் செய்தார். வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்ட திருத்த மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், 'நீட்' வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.