சேலம்: தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா என்பதே பெரும் சந்தேகமாக இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இயக்கம் தான் அதிமுக என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, எங்கு எப்போது பேசினாலும் முதல்வர் விஜய் வார்த்தைகளை யோசித்து பயன்படுத்த வேண்டும். கரூரில் பேசிய முதல்வர் திமுக - அதிமுகவை கூட்டு களவாணிகள் என்றார். ஆனால் எங்களின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களை திருடி, தனது கட்சியில் இணைத்து கொள்ளும் முதல்வர் விஜய் தான் உண்மையில் களவாணி என்று கடுமையாக சாடினார். நாலாந்தர பேச்சாளரின் போல் தான் கரூரில் விஜய் பேசியது இருந்தது. தேர்தலுக்கு முன் 2 திராவிட கட்சிகள் சரியில்லை, ஆதலால் மாற்று சக்தி நான் என்று முழங்கிய முதல்வர் விஜய் அதில் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சியையே பிடித்து உள்ளார். அப்படி என்றால் விஜய் இரட்டை வேடம் போடுகிறாரா! என்று கேள்வி எழுப்பினார். 60 நாட்கள் ஆட்சியில் தவெக ஒன்றுமே செய்யவில்லை, ஆக்கப்பூர்வ வேலை எதுவும் செய்யாமல், வெறும் பஞ்ச் டயலாக்களை தான் பேசி வருகிறார் என்று கடுமையாக சாடி உள்ளார்.