புனே: மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு லோகமான்ய திலக் தேசிய விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்.
அதன்பிறகு அவர் பேசியதாவது; அஜித் தோவலுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, நாட்டிற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும். குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த போதில் இருந்தே, அஜித் தோவலை எனக்கு தெரியும். குஜராத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, நாடு முழுதும் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரிக்க பரிந்துரைத்தார். இதையடுத்து, அஜித் தோவலை அழைத்து எனது துறை அதிகாரிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யுமாறு மோடி என்னிடம் கூறினார்.
அஜித் தோவல் அளித்த தகவல் மற்றும் ஆலோசனைகள் மூலம், குஜராத் போலீசார், ஆமதாபாத் குண்டுவெடிப்பை மட்டுமின்றி, நாடு முழுவதிலும் நடந்த 13 குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கும் வெற்றிகரமாகத் தீர்வு கண்டனர். 2014ல் மோடி பிரதமரான போது, முதன்மைச் செயலாளரை நியமிப்பதற்கு முன்பாகவே, அஜித் தோவலை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகத் தேர்ந்தெடுத்தார். நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்பில் அஜித் தோவலின் பங்கு மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.