சென்னை, செப். 19-

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த மாத இறுதியில் ஒரு முறையும், அடுத்த மாதம் தொடக்கத்தில் ஒருமுறையும் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்று தவெகவினர் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. அதிமுக எம்எல்ஏ-க்களாக இருந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் இருவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகினர். தற்போது இடைத்தேர்தலில் தவெக சார்பாகவே இவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தவெகவினர் மத்தியிலேயே ரசிக்கப்படவில்லை. அந்தந்த தொகுதியில் உள்ள தவெக நிர்வாகிகளே வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்று முனுமுனுக்க தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் தவெகவின் 4 மாத ஆட்சியில் மின்சார பிரச்சனை, ஆவின் பால் தட்டுப்பாடு, குதிரை பேரம், பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம், தூய்மை பணியாளர்கள் போராட்டம் என்று ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

மாணவர்கள் மத்தியிலும் தவெக ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவ தொடங்கி இருக்கிறது. இதனால் தவெகவின் தேர்தல் வியூகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் விஜய் 2 தொகுதிகளில் ஒருநாள் மட்டுமே பிரச்சாரம் செய்வதாக இருந்தது. தற்போது 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தல்.. ரூ.16.40 கோடி சொத்துக்களுடன் டாப்பில் நிற்கும் தவெக வேட்பாளர் சத்தியபாமா!

வேட்பாளர்கள் மீதான அதிருப்தியை போக்க, 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருக்கிறார். செப்டம்பர் மாத கடைசியில் ஒருநாளும், அக்டோபர் மாதம் தொடக்கத்தில் ஒருநாளும் 2 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதுமட்டுமல்லாமல் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஏதாவது ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தாலும், அது விஜய்க்கு எதிரான பிம்பத்தை உருவாக்க தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடும். இதனால் விஜய் எந்தவித ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து விஜய் வந்த உடனே இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசித்திருக்கிறார். அதில் உள்ள பிரச்சனைகளை தெரிந்து கொண்ட பின், விஜய்யும் வியூகத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.