மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரான 31 வயதாகும் அபிஜித் தீப்கே என்பவரால் சமூக வலைத்தளங்களில் நையாண்டியாகத் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’, நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தது.

‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’

அமெரிக்காவில் படித்து வந்த அபிஜித் தீப்கே தாயகம் திரும்பிய நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். சோனம் வாங்சுக்கின் தொடர் உண்ணாவிரதத்தால் இப்போராட்டம் மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது அக்கட்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சர்வதேச அளவில் பேசப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகளைப் பரப்பியது. இக்கட்சியினர் தற்போது பள்ளிகளின் மேம்பாட்டுக்காக அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போதைக்கு இதனை அரசியல் கட்சியாக மாற்றப்போவதில்லை என்றும் அபிஜித் கூறியிருந்தார்.

CJP 2ஆக உடைந்தது

இதனிடையே, அக்கட்சியின் மேல்மட்டத்தில் தற்போது மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முன்னணி நிர்வாகியாகத் திகழ்ந்த சமூக ஆர்வலர் மனிஷ் பிரம்பத் (Manish Brahmbhatt) என்பவர், கட்சித் தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேலும், ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - ஜனநாயகம்’ (Cockroach Janta Party - Democratic ‘CJP-D’) என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள மனிஷ் பிரம்பத், “இது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் இணைந்திருந்த மக்களின் கூட்டு பலத்தைப் பயன்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

‘ஆம் ஆத்மியின் பிரிவாக CJP செயல்படுகிறது’

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சியின் ஒரு பிரிவாகச் செயல்பட்டு வருகிறது” எனக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மற்றொரு சமூக ஆர்வலரான ராகுல் பாண்டேவுடன் இணைந்து கடந்த மாதம் அபிஜித் தீப்கேயின் வீட்டின் முன்பு மனிஷ் பிரம்பத் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய பிரம்பத், “டெல்லியில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் பங்கேற்ற உண்மையான களப் பணியாளர்களுக்குக் கட்சியின் முக்கியக் குழுவில் இடமளிக்கப்படவில்லை. முக்கிய நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேருமே ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். போராட்டத்தில் களமிறங்கிய பாஜக, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பிற இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை” என்றும் குற்றம் சாட்டினார்.

‘தலைமை தோல்வியடைந்துவிட்டது’

மேலும், “வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளால் தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் மையப் பிரச்சினையாக இருந்தது. ஆனால், இயக்கத்தின் உண்மையான நோக்கத்தை நிலைநிறுத்துவதில் தற்போதைய தலைமை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது” எனவும் அவர் விமர்சித்தார்.

நாடு தழுவிய அளவில் பெரும் கவனத்தையும், சர்வதேச அளவில் வரவேற்பையும் பெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பிளவைச் சந்தித்திருப்பது அக்கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.