மெல்போர்னில் உள்ள எம்.சி.ஜி. ஸ்டேடியத்தில் நடந்த ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வீழ்த்தியது. கோடை காலத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த டெஸ்ட் வெறும் 2 நாளில் முடிந்தது ரசிகர்களை மட்டுமின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். குறுகிய நாளில் போட்டி முடிந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.60 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இன்னொரு பக்கம் மெல்போர்ன் ஆடுகளம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உகந்த ஆடுகளம் அல்ல என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக் சாடினார். பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத் தன்மையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் மதிப்பிடுவது உண்டு. இதன்படி மெல்போர்ன் ஆடுகளத்தை தரமற்றது என்று ஐ.சி.சி. முத்திரை குத்தியுள்ளது.

ஐ.சி.சி. போட்டி நடுவர் ஜெப் குரோவ் கூறுகையில், '

மெல்போர்ன் எம்.சி.ஜி. ஆடுகளம் அளவுக்கு அதிவேகமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. முதல் முதல் நாளில் 20 விக்கெட்டுகளும், 2-வது நாளில் 16 விக்கெட்டுகளும் சரிந்தன. ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. ஐ.சி.சி.யின் மைதான பிட்ச் மற்றும் அவுட்பீல்டு கண்காணிப்பு வழிகாட்டுதலின்படி இது ஒரு திருப்தியற்ற ஆடுகளம். அதனால் இந்த மைதானத்திற்கு ஒரு தகுதி இழப்பு விதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு இங்கு நடந்த கடைசி 3 டெஸ்ட் போட்டிகளின் போது இது சிறந்த ஆடுகளம் என்று ஐ.சி.சி. பாராட்டியிருந்தது. ஐ.சி.சி. ஒரு மைதானம் 5 ஆண்டுக்குள் 6 தகுதி இழப்பு புள்ளியை பெற்றால் அந்த மைதானத்தில் ஓராண்டு சர்வதேச போட்டி நடத்த தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.