மதுரை, செப். 19-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு மருத்துவ பாதுகாப்பு சிகிச்சைக்கென இரு வார்டுகள் மொத்தம் 60 படுக்கைகளுடன் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்துமதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ்குமார் கூறியதாவது: மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு அரசு மருத்துவமனை, மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை டாக்டர்கள் இணைந்து மருத்துவ சேவையளிக்க உள்ளோம். இதில் மதுரை அரசு மருத்துவமனை சார்பாக எலும்பு முறிவு, பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருத்துவர்கள் உள்ளடக்கிய சிறப்பு மருத்துவக்குழு கோயில் வளாகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையின் அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள தீவிர விபத்து சிகிச்சை பிரிவில் பிரத்யேகமாக 30 படுக்கைகள் கொண்ட வார்டும், அரசு மைய மருத்துவமனை வளாகத்தில் 30 படுக்கைகள் கொண்ட வார்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான அவசர சிகிச்சை பணி டாக்டர்கள் தவிர கூடுதலாக சிறப்பு டாக்டர்கள் அடங்கிய மற்றொரு குழுவும் செப்.16 (நேற்று) முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு இரு வளாகங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மற்றொரு சிறப்பு மருத்துவ குழுவும் தேவைப்படும் பட்சத்தில் அழைப்பின் பேரில் உடனடியாக பணிக்கு வர தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான சிகிச்சைக்கு விபத்து அறுவை சிகிச்சை பிரிவிற்கும், பிற மருத்துவ அவசரத்திற்கு அரசு மைய மருத்துவமனை வளாகத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வர ஒருங்கிணைப்பு செய்யட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.