கிறிஸ்துமஸ் தினத்தன்று போர் நிறுத்தம் செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது வேதனை அளிப்பதாக போப் 14-வது லியோ தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒருதினம் மட்டும் போர்களை நிறுத்தி, உலக அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று போப் 14வது லியோ கோரிக்கை விடுத்தார். ஆனால் போப்பின் இந்தக் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து விட்டது.
இதனால், வேதனை அடைந்த போப் 14-வது லியோ ரோமிற்கு அருகே உள்ள காஸ்டல் கண்டால்போ இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது;
கிறிஸ்துமஸ் தினத்தன்று போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது எனக்கு வேதனையளிக்கிறது. எங்கள் கடவுளின் பிறந்த நாளில் குறைந்தபட்சம் ஒருநாளாவது, சமாதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நல்லெண்ணம் கொண்ட அனைவருக்கும் மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன். இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்பார்கள் என்று நம்புகிறேன். உலகம் முழுவதிலும் 24 மணிநேர சமாதானம் நிலவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று அவர் கூறினார்.