பாகிஸ்தான், செப். 17-

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மற்றும் சிறை நிலைமைகள் குறித்து கவலை தெரிவித்து, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் 7 பேர் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்கிடம் (Penny Wong) தூதரக ரீதியிலான தலையீட்டை வலியுறுத்தியுள்ளனர்.

“சிறையிலேயே உயிரிழக்கக் கூடும்”: கிரெக் சேப்பல் அச்சம்

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சேப்பல், இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். இம்ரான் கானின் தற்போதைய நிலை குறித்து கேட்கப்பட்டபோது, “அவர் சிறையிலேயே உயிரிழந்துவிடுவாரோ என்று நாங்கள் அச்சப்படுகிறோம்” என மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றின் முன்னணி நட்சத்திரங்களான பின்வரும் 7 கேப்டன்கள் இணைந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்:

* கிரெக் சேப்பல் (Greg Chappell), ஆலன் பார்டர் (Allan Border), இயன் சேப்பல் (Ian Chappell), * பெலிண்டா கிளார்க் (Belinda Clark), கிம் ஹியூஸ் (Kim Hughes), * மார்க் கெய்லர் (Mark Taylor), * ஸ்டீவ் வாக் (Steve Waugh).

கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்: அந்தக் கடிதத்தில், “நாங்கள் தூதர்களாகவோ அல்லது அரசியல்வாதிகளாகவோ இந்தக் கடிதத்தை எழுதவில்லை; சக கிரிக்கெட் கேப்டன்களாகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை இருப்பதால் எழுதுகிறோம். இம்ரான் கான் மீதான வழக்குகள் பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரம். ஆனால், கைதியாக இருக்கும் ஒருவருக்கு அடிப்படை மனித உரிமைகள் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவது மனிதநேயம் சார்ந்த விஷயம்” என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

2022-இல் இம்ரான் கானை நேரில் பார்த்தபோது அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார் என்றும், தற்போது சிறையில் இருந்து வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாகவும் கூறியுள்ளனர். இம்ரான் கானின் மகன்களும் சகோதரிகளும் அவருக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதில்லை, வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது எனக் கூறி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

73 வயதான இம்ரான் கான், 1992-இல் பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர். 2023 முதல் சிறையில் இருக்கும் அவருக்கு எதிரான வழக்குகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அவரது ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். முன்னதாக, சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்ட 21 சர்வதேச முன்னாள் கேப்டன்களும் இம்ரான் கானுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.