சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிறை. இப்படத்தில் எல்.கே.அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழ் சினிமாவிலிருந்து சிறை மாதிரியான நல்ல படம் வந்திருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. சிறைப் படப்படப்பிடிப்பு எல்லாமே ரியல் லோகேஷனில்தான் எடுத்தோம். முன்பே அனுமதி வாங்கி, கேமராவை மறைத்து வைத்து எடுத்திருக்கிறோம். கஷ்டப்படமால் சினிமா இல்லை. கஷ்டப்பட வேண்டும். அப்போதுதான் அந்த ஒரிஜினாலிட்டி வரும். கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

என்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் எனக்கு கதை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. புதுமையாகவும், ரசிகர்களை திருதிப்படுத்தும் கதையாக இருந்தால் நடிப்பேன். இதுவரை நான் நடித்த பெரும்பாலான படங்கள் அறிமுக இயக்குநர்களுடையதுதான். எனக்கு அப்பாகூட நடிக்க வேண்டுமென்று ஆசை. அப்பாவும் 'எப்போடா நாம சேர்ந்து வொர்க் பண்ணப் போறோம்னு கேப்பாங்க. எங்களுக்கு ஏற்ற கதை வர வேண்டும். ஒருவேளை நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால், அப்பாவின் கேரக்டரைதான் முதலில் பார்ப்பேன். அது நன்றாக இருந்தால்தான் ஒகே சொல்வேன். ஒருவேளை வரும் ஆண்டுகளில் அது சாத்தியமாகலாம் என நம்புகிறேன் என்றார்.